சிரியாவுக்கான நன்கொடையாக சீனாவின் ஒன்றரை இலட்சம் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி டமாஸ்கஸை இன்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளது.
அத்துடன், சீனாவின் இந்த உதவியைப் பாராட்டுவதாகவும், இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என சிரிய சுகாதார அமைச்சர் ஹசன் கபாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசிகள் முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பின்னர் முதியவர்கள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அடுத்தக்கட்டமாக மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் என சிரியாவுக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யாவுடனும் தடுப்பூசிகள் குறித்து விவாதித்து வருவதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் சிரியா முதல் தடவையாக இந்த வாரத்தில் இரண்டு இலட்சம் அஸ்ட்ராசெனேகா கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு சிரியா முழுவதும் தடுப்பூசி திட்டத்தை மேற்கொள்வதற்காக குழுக்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.