மாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், தனுஸ்கோடி பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஸ்கோடி- அரிச்சல்முனை கடற்கரையில், பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் நடமாடுவதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய அப்பகுதிக்கு உடனடி விஜயம் மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரான பங்களாதேஷைச் சேர்ந்த திலீப் நாராயணனை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், கடன் பிரச்சினை காரணமாக மாலைத்தீவுக்கு தொழிலுக்காக செல்வதற்கு, பங்களாதேசை சேர்ந்த குலாம் என்ற முகவரிடம் பணம் கொடுத்துள்ளார். மேலும் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தனுஸ்கோடி வழியாக மாலத்தீவுக்கு படகில் சென்று விடலாமென குறித்த முகவர் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை,கொல்கத்தாவில் இருந்து பேருந்தில் புறப்பட்டு மதுரை சென்று, அங்கிருந்து பேருந்தின் ஊடாக நேற்று (திங்கட்கிழமை) இரவு இராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்பின்னர் தனுஸ்கோடி செல்லுவதற்கு பேருந்து இல்லாதமையின் காரணமாக சாலை மார்க்கமாக நடந்து, தனுஸ்கோடி- அரிச்சல்முனை வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை திலீப் நாராயணன் மாலைத்தீவு செல்வதற்குதான் தனுஸ்கோடிக்கு வந்தாரா? அல்லது இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதற்காக வந்திருப்பாரா? என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.