தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முகக்கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்றும்
நோய் பாதிப்பு குறைவாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
கூடுதலாக 12 ஆயிரம் ஒக்சிஜன் படுக்கைகளை தயார் செய்யவுள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 2000 ஒக்சிஜன் படுக்கைகள் தயாராக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததால் தடுப்பூசி வீணாக வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், இது தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றும் மே மாதத்தில் நிச்சயம் வீணடிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.