சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன.
அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின் ஊடாக தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடுகின்றன.
மேலும் பிரதான அரசியல் கட்சிகள், வழமைப்போன்று இல்லாமல் இம்முறை தொழிலாளர் தின பேரணிகளை தவிர்த்துள்ளன.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள், தங்களது தொழிலாளர் தின நிகழ்வினை இணையத்தளம் ஊடாக ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி ஆகியன குறிப்பிட்டளவான தரப்பினருடன் ஒன்றிணைந்து, கமியூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தில் தொழிலாளர் தின நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் 12- 18 மணிநேரம் கட்டாயம் தொழில் புரிய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் காணப்பட்டது.
இதன்போது அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புரட்சியே மே தின உருவாக்கத்தின் ஆரம்பமாக காணப்பட்டது.
இதேவேளை 1832 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொஸ்டனில் கப்பலில் பணிப்புரிந்த தச்சு ஊழியர்கள், 10 மணி நேர தொழில் கோரிக்கையினை முன்வைத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தினை தொடர்ந்து, ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ என்ற இயக்கத்தை அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களிலுள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கின.
குறித்த இயக்கம் 8 மணிநேர தொழில் கோரிக்கையை முன்னிறுத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன.
அதாவது 1886 ஆம் ஆண்டு, மே மாதம் 4 திகதியன்று சிக்காக்கோ நகரில், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டமொன்றினை நடத்தி இருந்தனர்.
குறித்த போராட்டம் ஆயுத பலத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இதில் பலர் கொல்லப்பட்டதுடன் பெரும்பாலாபனோர் காயங்களுக்குள் உள்ளாகினர்.
இதேவேளை 1889 ஜூலை, 14 ஆம் திகதியன்று பாரிசில், சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் ஒன்றுக்கூடியது.
இதில் 1890 ஆம் ஆண்டு, மே மாதம் 1ஆம் திகதி உலகலாவிய ரீதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டினை தொடர்ந்தே மே 1ஆம் திகதி, தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இலங்கையில், சர்வதேச தொழிலாளர் தினம் 1934 ஆம் ஆண்டு முதல் முறையாக கொண்டாடப்பட்டதுடன் 1956 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் தினம், அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.