ஈரான் மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷ்யாவுக்கே கொண்டு வந்து சுத்திகரிக்கவோ அல்லது பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவோ தாங்கள் தயாராக இருப்பதாக ரஷ்யா மீண்டும் உறுதியளித்துள்ளது.
இது தொடா்பாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
ஈரானின் யுரேனியத்தை ரஷ்யாவுக்கு மாற்றிப் பாதுகாக்கும் திட்டம் நீண்ட நாட்களாகவே ஆலோசனையில் உள்ளது. ஈரான் மீது சில நாடுகளுக்கு உள்ள கவலைகளைப் போக்கவே இந்த யோசனையை ஒரு தீா்வாக ரஷ்யா முன்வைக்கிறது.
இப்போதுள்ள சூழலில், இதில் சம்பந்தப்பட்ட ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் பேசி வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தைக் குறைத்துஇ அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா்.
















