முல்லைத்தீவு மாவட்டத்தில் உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், துறைசார் அதிகாரிகள், நாரா தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்துடன், நாயாறு பிரதேசத்தில் பாரம்பரியமாக கடற்றொழிலில் ஈடுபட்ட சிலாபம் கருக்குப்பனையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதியை வரையறை செய்யும் பொறிமுறை குறித்தும் பேசப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நந்திக்கடல் களப்பு புனரமைப்பின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளதுடன் அடுத்தக் கட்டப் பணிகளும் விரைவுபடுத்தப்பட வேண்டுமென கோரப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா, இரண்டாம் கட்டப் பணிகள் தொடர்பான தமது ஆய்வுகள் நிறைவடைந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பெறப்பட வேண்டிய அனுமதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, முலலைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு கடற்றொழில்சார் விவகாரங்கள் தொடர்பான இன்று ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.