ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவிருந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.
கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான ‘பயோ’ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் தனது தோளில் ஏற்பட்ட காயத்தினை ஸ்கான் செய்வதற்காக வருண் சக்கரவர்த்தி, ‘க்ரீன் சனல்’ எனப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டினூடாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவரிடமிருந்து சந்தீப்புக்கு தொற்றியிருக்கலாமென்றும் நம்பப்படுகிறது. ஐ.பி.எல்.2021 தொடர் ஆரம்பித்த பின்னர் அணிகளில் விளையாடும் வீரர்களுக்கு தொற்று ஏற்படும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
இதே வேளை, சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவில் உள்ள மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அணியின் சி.இ.ஓ.வான கே.விஸ்வநாதன், பந்து வீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வாகன துப்புரவு ஊழியர் ஒருவர் என தொற்றுக்குள்ளான மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லையென்பது உறுதியாகியுள்ளதால் சூப்பர் கிங்ஸ்ஸின் அடுத்த போட்டி தடையின்றி நடைபெறுமென பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர் ஆரம்பமானபோது ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை, பின்னர் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட்டு இப்போது இரு தினங்களுக்கொரு தடவை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.