ஈழத் தமிழிரின் பாதுகாப்பு தமிழக தமிழ் உறவுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன்.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாகவும், ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் உருத்திரகுமாரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐந்து தசாப்தங்கள் அரசியல் பட்டறிவின் வழிநின்று செயற்பட்டதுடன் மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு தி.மு.க. அடைந்துள்ள பெரும் வெற்றியே, ஸ்டாலினின் ஆளுமைக்குக் கட்டியம் கூறுவதாக உருத்திரகுமாரன் கு்றிப்பிட்டுள்ளார்.
இதேவேளை. இலங்கை தீவின் தமிழர் தேசிய இனப் பிரச்சினையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஏற்படுத்துவதற்கு தமிழகத்தின் புதிய முதல்வரின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையையும், சமூக நீதியையும் நிலைநிறுத்தவும் பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இதேவேளை, இலங்கையில், வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.
எனினும், 2009ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைத் தடுத்துநிறுத்த முடியவில்லை என்ற வேதனை தி.மு.க.வுக்கும் உள்ளதை நாம் அறிவோம்.
எனவே, தமிழ்நாட்டில் முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றிருப்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழரின் நல்வாழ்வுக்காக இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என தாம் நம்புவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழக அரசின் அமைச்சுத் துறைகளில் ஒன்றாக இதுவரையும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இந்த மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள்.
இந்த அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும்.
அதற்கான, தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்கிறோம்.
அத்துடன், தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஈழத் தமிழர் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் உள்ளன.
எனவே, தாங்கள் இவற்றை மீளக் கையிலெடுத்து, இந்த இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உள்ளது.
மேலும், இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் இருந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும் என வி.உருத்திரகுமாரன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.