கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரி மாணவர்கள் சிலரால் நவீன முறையிலான நெல் நாற்று நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை இன்று (சனிக்கிழமை) சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
இந்த நவீன பொறிமுறையினால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் களைநாசினிகளின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டு அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்திச் செலவும் குறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைய, நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்கிணங்க இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நெல் பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு ஏற்றவகையில் நெல்லை குறைந்த செலவில் பாத்திகள் அமைத்து முளைக்க வைத்து, நாற்று நடும் இயந்திரத்தைக் கொண்டு விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் நாற்று நாட்டப்படுகின்றது,
அத்துடன், அந்த வயல் நிலங்களில் புல் பிடுங்கும் இயந்திரம் மூலம் களை பிடுங்குவதன் மூலம் 100 வீதம் களைநாசினிகள் அற்ற, நஞ்சற்ற அரிசி வழங்கும் முயற்சியை விவசாயிக்ள மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த முயற்சியைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.