இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது.
இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் நிலையை அடுத்தே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1961ஆம் ஆண்டின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்தத் தடையுத்தரவு பொருந்தாது என மலேசிய சிரேஷ்ட அமைச்சர் இஸ்மாயில் யாகூப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியப் பயணிகள் மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்ததுடன் தெற்காசிய நாடுகளில் இருந்தான கப்பல்கள் வருகைக்கும் கடும் கட்டுப்பாடுகளை மலேசியா பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.