சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது விண்கலத் தொகுதியான லோங்க் மார்ச் 5-பி என்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதன், பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.
இந்த பாகங்கள், இந்தியா, இலங்கைக்கு தென்மேற்காக இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பூமியின் வளிமண்டலத்துக்குள் குறித்த விண்கலம் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி பாகங்கள் எரிந்து அழிவடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவைத் தொடர்ந்து தங்களுக்கென சொந்தமான விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகின்றது.
இதன் ஒருகட்டமாக கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி லோங் மார்ச் 5-பி (Long March 5B) என்று அழைக்கப்படும் 22 தொன் எடைகொண்ட விண்கலத்தை 100 அடி உயர இராட்சத ரொக்கெட் மூலம் சீனா விண்ணில் செலுத்தியிருந்தது.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை விண்கலம் இழந்தது.
இதையடுத்து, இந்த விண்கலத்தின் பாகங்கள் பூமியின் எந்தப் பகுதியில் விழும் என்ற அச்சம் உலக நாடுகளின் விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில், மக்கள் வாழும் தரைப்பகுதியில் அல்லாமல் கடற்பரப்பில் வீழ்ந்துள்ள நிலையில் எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.