தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் ம.ஜெயகாந்த் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
உலக நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமான வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் பிராத்தனை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்திலும் விசேட மஹாம்ருத்யுஞ்ஜய யாக பூசைகள் இடம்பெற்றதுடன், கொரோனா வைரஸ் பரவல் மு்றறாக நீங்கி மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்திட அபிஷேகப் பூசைகள் நடைபெற்றன.
ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பத்மஸ்ரீதர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட யாகத்தில், ஆலய நிர்வாகத்தினர் மற்றம் வாழைச்சேனை கிராம அதிகாரி எஸ்.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திலும் நேற்று மாலை மஹா மிருத்யுஞ்சய ஹோம வழிபாடு இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குருவான பிரபாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இவ்வழிபாட்டில் அந்தண சிவாச்சாரியார்களால் கோமம் வளர்க்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன், இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து கொரோனா தொற்று நீங்குவதற்காக சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று மாலை நடைபெற்றன.
இதன்படி, யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயத்தில் மணியொலி எழுப்பப்பட்டதுடன் செப மன்றாட்ட வழிபாடு இடம்பெற்றது.
இதேவேளை, சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலில் சூரத்துல் பாத்திஹா ஓதுதல், யாஸீன் ஓதுதல், விசேட துஆ பிரார்த்தனை என்பன சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.தாசீம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விசேட துஆ பிராத்தனையினை சம்மாந்துறை மஸ்ஜித்துல் நகர் பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.ஏ.எம்.ஜாபிர் நிகழ்த்தியிருந்தார்.