“கொவிட்-19” அறிகுறிகளற்ற கொரோனா நோயாளர்களை அவர்களது சொந்த வீடுகளில் வைத்து பராமரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்தால் இந்த முறையைக் கையாள்வது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ஒரு குறிப்பிட்டளவு நோயாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். கொவிட்-19 அறிகுறிகள் அவர்களுக்கு பெரியளவில் இல்லை. அவர்களை விரைவில் வைத்தியசாலைகளுக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்படுகின்றன.
அறிகுறியற்ற நோயாளர்களுக்கு தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும், தங்கள் வீடுகளில் தொடர்ந்தும் இருக்கக்கூடிய அறிகுறியற்ற நோயாளிகள் குறித்தும், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பது குறித்தும் நாங்கள் ஆராந்து வருகின்றோம்” என்றார்.
இதேவேளை, வீடுகளில் உள்ள கொவிட்-19 நோயாளர்களைப் பராமரிப்பது குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை தயாரிப்பது குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக இவ்வார ஆரம்பத்தில் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளோ ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், தற்சமயம் கொரோனா தொற்றால் இனங்காணப்படும் நபரை உடனடியாக கொரோனா சிகிச்சை மையங்களிற்கு அழைத்துச் செல்லும் நடைமுறை இருக்கின்ற போதும், மேலைத்தேய நாடுகள் பலவற்றில் கொரோனா நோயாளர்கள் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெறுவதுடன், தமது நோய் நிலைமை குறித்து வைத்தியசாலைகளுக்கு அறிவித்து, அவசர தேவை ஏற்படின் வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் நடைமுறை ஏலவே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.