மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது. டை பிரேக் வரை நகர்ந்த முதல் செட்டில் 7-6 என பெரெட்டினி செட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டெழுந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
மூன்றாவது செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். இதில் ஆக்ரோஷமாக விளையாடிய அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-3 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டு சம்பியன் பட்டதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.