கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஊவா மற்றும் பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான ஆதரவு தமக்கு கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தி, அம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் சுகயீன விடுமுறையில், இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் திஸாநாயக்க தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடு, பதுளை மாவட்டத்தில் உரிய முறையில் முன்னெடுக்க முடியாத காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் விடயத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் நாளாந்த கடமை என்ன என்பது தொடர்பாக உரிய தெளிவுபடுத்தலொன்றினை எதிர்பார்க்கின்றோம்.
மேலும் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாவட்ட மக்களுக்கு ஆரோக்கியமான சேவையை வழங்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
ஆகவேதான் இன்றைய தினம், சுகயீன விடுமுறையை அனைவரும் பதிவு செய்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.