தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
அத்துடன் இராணுவத்தின் கைது நடவடிக்கையின் போது, இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாகியுள்ள மியன்மாரின் நிழல் அரசாங்கமாக செயற்பட்டு வரும் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியன்மார் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவையும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகியுள்ள துணை ஜனாதிபதி மான் வின் கைங்கின் தலைமையில் உருவாகியுள்ள இந்த குழு, நாட்டின் மக்களாட்சி அரசங்கமாக செயற்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.
இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மியன்மார இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 700க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.