சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹராரே மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபிட் அலி ஆட்டமிழக்காது 215 ஓட்டங்களையும் அசார் அலி 126 ஓட்டங்களையும் நவுமான் அலி 97 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், முஸரபானி 3 விக்கெட்டுகளையும் டென்டாய் சிசோரோ 2 விக்கெட்டுகளையும் ன்கார்வா, லுக் ஜோங்வே மற்றும் ட்ரிபானோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரெஜிஸ் சகாப்வா 33 ஓட்டங்களையும் ட்ரிபானோ 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும் சஜித் கான் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி மற்றும் தபிஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
சிம்பாப்வே அணி, பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் 498 ஓட்டங்கள் பின்னிலை பெற்றிருந்ததால், போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அழைத்தது.
இதையேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்த சிம்பாப்வே அணி, இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 231 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரெஜிஸ் சகாப்வா 80 ஓட்டங்களையும் பிரெண்டன் டெய்லர் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி மற்றும் நவுமான் அலி ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அபிட் அலியும் தொடரின் நாயகனாக ஹசன் அலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.