நீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அவரை கைது செய்ய பரிந்துரைக்கவில்லை என்றும் சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் பேசிய அவர், சாட்சியங்கள் ஏதேனும் இருந்தால், அதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ரிஷாட் பதியுதீன் ஒரு சந்தேக நபராகவோ அல்லது பிரதிவாதியாகவோ நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை. எனவே, அவருக்கு நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரிஷாட் பதியுதீன் பங்கேற்க எந்த தடையும் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் சரியான காரணம் இல்லாமல் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர சி.ஐ.டி. மறுத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.