இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர்.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமை தாங்கினார்.
இதன்போது, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
நாட்டில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்கவும், மாவட்ட அளவில் ஆய்வக வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுபவர்கள் முடிவு கிடைக்கும் வரை வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சிகிச்சை வசதிகளுக்கும் போதுமான ஒட்சிசன் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.