வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம் (திங்கட்கிழமை) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேரை சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர் என்றும் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் குரே காலத்தில் 130 பேர் தற்காலிகமாக கடமையாற்றிய நிலையில், அவர்களையும் இணைத்து 970 பேர் பணி நிரந்தர நியமனம் கேட்டு போராடி வருவதாக குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு இரு தடவைகள் இடம்பெற்ற நிலையில் ஊழல்கள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இறுதி யுத்தத்தின்போது கடமையாற்றிய சுகாதார தொண்டர்கள் இறுதியாக இடம்பெற்ற நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தம்முடைய சகல ஆவணங்களும் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேர்முகத் தேர்விற்கு தம்மை அழைக்காமை பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது என்றும் தெரிவித்தனர்.
எனவே வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனம் கேட்டு விண்ணப்பித்த 970 பேருக்கும் குறித்த நியமனத்தை பாகுபாடின்றி தர வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.