வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதனால் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என தடுப்பூசி நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பாக நாட்டில் உள்ள வைத்திய நிபுணர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் கூறினார்.
எனவே, தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்கள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதில் அச்சம் அல்லது சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இரண்டாவது டோஸ்செலுத்திக்கொள்ள தேவையான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை பெறுவதற்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாட்டிலிருந்து அல்லது ஏற்கனவே தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட நாட்டிலிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.