குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட்டின் உடல்நலம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசாரித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மொஹமட் நஷீட்டின் தந்தையான அப்துல் சதாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பிரதமர், நஷீட்டின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன் விரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிராத்தித்துள்ளார்.
மேலும் மொஹமட் நஷீட் குணமடைவதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின், அவை தொடர்பில் அறிவிக்குமாறும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி இரவு, மாலைத்தீவிலுள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த வேளையில் மொஹமட் நஷீட், குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.