இலங்கையில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட்டின் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா கூறுகையில்,
‘நாங்கள் தற்போது, இந்த ஆண்டின் எல்.பி.எல். தொடரை நடத்த பொருத்தமான காலத்தை கண்டுபிடித்துள்ளோம். போட்டியின் பிற விவரங்களை இறுதி செய்வதில் தற்சயம் ஈடுபட்டுள்ளது’ என கூறினார்.
இந்நிலையில் இரண்டாவது தொடரின் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் நாட்டின் சுகாதார நிலைமையை அறிந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் சுகாதார அமைச்சகத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளும்.
கடந்த ஆண்டு வெளிநாட்டு வீரர்களுடன் ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) கிரிக்கெட் தொடரில், 05 அணிகள் பங்குபற்றின. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றன.
இத்தொடரில் திசர பெரேரா தலைமையிலான யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி முதல் சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.