மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி சுகாதார மருத்துவப் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி கிரான்குளத்தில் ஒருவர் மரணமானதைத் தொடர்ந்து அப்பகதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் பெருமளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணிக் கூட்டத்தில் குறித்த பகுதியை முடக்குவதற்கான பரிந்துரை தேசிய கொவிட் செயலணிக்கு அனுப்பப்பட்டது.
இதன்படி, கிரான்குளம் கிராமசேவகர் பிரிவின் ‘சி’ பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலைய வீதி, கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு ‘பி’ பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளை இன்று காலை பொலிஸாரும் படையினரும் சுகாதார பிரிவினரும் இணைந்து தனிமைப்படுத்தியுள்ளதுடன், அப்பகுதிகளில் அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.