இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதலில், காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேற்குக் கரையில் நடந்த வன்முறையில் 11பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் ஒரு சுரங்கப்பாதை வலையமைப்பில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி டஸன் கணக்கான nhக்கெட்டுகளை வீசியுள்ளது
மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். தற்போது மேற்குக் கரையில் மோதல்கள் பரவியுள்ளன
ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தது.
இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல், கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றது.