டாக்டே புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து மாநில அதிகாரிகளுடன் அமித்ஷா காணொலி வாயிலாக ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம், மற்றும் ஒக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
புயல் கரையை கடக்கும்போது இயற்கை சீற்றங்களால், கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி இருப்பு வசதிகள், தீவிர சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஒக்சிஜன் வசதிக்காக தற்காலிக மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை உறுதியான கட்டிடங்களுக்கு மாற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
புயலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், அத்தியாவசிய மருந்துகளையும், உணவு பொருட்களையும் போதிய அளவுக்கு இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.