இலங்கை கிரிக்கெட் சபைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அணிகள் இலங்கை அணியுடன் கூடுதல் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.
இதன் முதற்கட்டமாக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணி, இந்த தொடரில் கூடுதலாக இரண்டு போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த கடந்த வருடம் இலங்கை சென்று இந்தியக் கிரிக்கெட் அணி, வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தொடர் இரத்து செய்யப்பட்டது.
இதற்கு பதிலாக எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியக் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில், எனினும், கடந்த வருடம் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கூடுதல் போட்டிகள் நடத்தினால் தொலைக்காட்சி உரிமை மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.
இதனால் இந்திய கிரிக்கெட் சபையிடம் கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை- இந்தியா தொடரில் கூடுதலாக இரண்டு போட்டிகள் நடத்தபட இருக்கிறது.
அத்துடன் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, ஒகஸ்ட் மாதமும் ஸ்கொட்லாந்து செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் நவம்பர் மாதமும் இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அப்போதும் கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்தவுள்ளது.