தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல நிபுணர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறினார்.
இந்நிலையில் நாட்டின் முன்னேற்றங்களின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் வீட்டில் தங்குவதை உறுதி செய்வதற்காக இந்த பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அவசரத் தேவை தவிர மக்கள் அநாவசியமாக நடமாட மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறினார்.