கொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை, மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் என சீன, இலங்கை அரசாங்கங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான தனது அவசர மின்னஞ்சல் சீன தூதுவருக்கு இன்று அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்தப் பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எம் தாய் நாட்டுக்குள்ளே எமது தாய்-தமிழுக்கு சட்டரீதியாக இருக்கும் அந்தஸ்தை எமது அரசே தருவதில்லை. இது கசப்பான உண்மை. ஆனால் இது எமது உள்நாட்டு பிரச்சினை.
அதற்காக வெளிநாடு ஒன்று எம் தாய்நாட்டுக்குள் வந்து எங்கள் தமிழ்மொழியை புறக்கணிப்பதையும் தமிழின் இடத்தை சீன மொழி (மான்டரின்) பிடிப்பதையும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்பதை சீன அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கள் தாய்-தமிழை, அடிக்கடி திட்டமிட்டு புறக்கணிப்பது சிங்கள-பெளத்த பேரினவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் என சீனா கணக்கு போட்டால் அது ‘தப்புக்கணக்கு’ என்பதை சீனா மனதில்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி இலங்கைக்கு உள்ளே எண்ணிக்கையில் சிறுபான்மையினர் பேசும் மொழியாக இருக்கலாம்.
ஆனால் எங்கள் உலக செம்மொழியாம் தமிழ், 5ம் நூற்றாண்டில் சீனத்துக்கு வந்து, சீனாவுக்கு புதிய நாகரிகத்தை போதித்த.
சீன மக்களை, சீன நாட்டை விரும்பிய, ‘போதிதர்மனின் தாய்மொழி’ என்பதை சீன அரசாங்கம் குறிப்பாக கொழும்பில் உள்ள சீன தூதுவர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.