நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பென் ஃபோக்ஸ், விலகியுள்ளார்.
ஓவலில் நடைபெற மிடில்செக்ஸுக்கு எதிரான கவுண்டி சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் பென் ஃபோக்ஸ்க்கு இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆகையால் அவருக்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியுள்ளதால், அவர் இத்தொடரில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக விக்கெட் காப்பு துடுப்பாட்;ட வீரரான சேம் பில்லிங்ஸ் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், ஏற்கனவே அணியில் ஒரு பகுதியாக இருந்த ஜேம்ஸ் பிரேசி பதினொருவர் கொண்ட அணியில் விக்கெட் காப்பாளராக இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஹசீப் ஹமீத்தும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். கடைசியாக அவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடியிருந்தார்.
28 வயதான பென் ஃபோக்ஸ், இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்களாக 410 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அடுத்த மாத ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு செல்லும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.
இந்த தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி லண்டன் – லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.