சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊரடங்கை நீடிப்பதா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதன்போதே முதலமைச்சர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், தொற்று பரவல் அதிகமாக இருக்கின்ற கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொற்றினை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகள் சிறப்பாக காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தடுப்பூசி போடுவதை பொறுத்தவரையில், கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மற்ற நான்கு மாவட்டங்களிலும் 18 வயதில் இருந்து 44 வயது வரையில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.