நுவரெலியா- ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவிலுள்ள 3ஆம் இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில், சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தோட்ட ஆலய மண்டபத்தில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “வீடுகளின் கூரைகள், தளபாடங்கள் மற்றும் பொருட்கள் அதிகளவு சேதமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களை, தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதோடு, சம்பவம் தொடர்பாக கிராமசேவகர் ஊடாக நோர்வூட் பொலிஸார் மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள், மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நெடுங்குடியிருப்பில் இருக்கின்ற ஏனைய 5 வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுகின்றன. இவைகளும் இடிந்து விழும் அபாயம் இருக்கின்றது என அக்குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே எங்களின் முக்கியமான இந்த பிரச்சினைக்கு, உரிய தீர்வை உடனடியாக வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.