கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.
ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவரின் ஆதிக்கம் இருக்கும் என்றே பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்களுக்கு அரசியலில் இருந்து விலகபோவதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியே மலர வேண்டும் எனவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது.
இருப்பினும் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி தோல்வியை தழுவவே சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரபோகிறார் என்ற கருத்துக்கள் பரவலாக சொல்லப்பட்டன.
இதற்கு தீணிப்போடும் வகையில் அண்மையில் கட்சி தொண்டர்களுடன் அவர் பேசிய குரல்பதிவுகள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசியுள்ள ஐந்தாவது குரல்பதிவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குரல்பதிவில் கொரோனா தாக்கம் முடிந்தவுடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். எதுக்கும் பயப்படாதீங்க என ஆறுதல் சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்ற குரல் பதிவுகளால் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.