கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கப்பலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என வணிகக் கப்பல் செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகள் தீயை அணைக்க இடைவிடாமல் போராடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொத்த இழப்பீடு பெற சட்டமா அதிபர் மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும் என்றும் இதற்கிடையில், கப்பல் உரிமையாளர்கள் கடற்கரை அனுமதிப் பணிகளுக்கு ஆதரவாக கூடுதலாக ஒரு இடைக்கால அறிக்கையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தமையால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு குறித்த கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்மியுல் யோஸ் கொவிட்ஸ் (Shmuel Yoskovitz) மன்னிப்பு கோரியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ள அவர், இந்த சம்பவம் குறித்து தான் பெரிதும் வருத்தமடைந்திருப்பதாகவும் இதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.