”இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன், இந்த பாட்டும் எந்தன் மூச்சும் அணையா விளக்கே” பாடல் வரிகள் உங்களுக்காக உருவானதா? அல்லது நிகழாண்டில் உங்களுக்கு பொருந்தி போனதா? நாம் அறியோம்.
பாடும் நிலாவின் பாடல்களுடன் கொண்டாடத்தில் இருக்க வேண்டிய இன்று ஏனோ மனங்களில் ஒரு கனத்துடன் நினைவுகூறுகிறோம். ஆம் பாடும் நிலா எஸ்.பி.பியின் பிறந்த தினம் இன்று. அவர் பற்றிய நினைவுகளை சுமந்து வருகிறது இந்த கட்டுரை.
இந்திய திரைப்படப் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பண்முக தன்மை கொண்ட எஸ்.பி.பி ஆந்திர மாநிலத்தில் ஜுன் மாதம் 4 ஆம் திகதி 1946 இல் பிறந்தார்.
இவரின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். அதனால் என்னவோ இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம்.
தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டு போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றக்கொண்டார். அந்த மேடைதான் எஸ்.பி.பியின் இசை பயணத்தை ஆரம்பித்து வைத்தது எனலாம். அந்த பரிசுதான் பின்னாளில் ஏராளமான விருதுகளை அள்ளித்தந்து மகிழ்வித்தது.
“இளையக்கன்னி” என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், அதற்கு முன்பதாகவே தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் “ஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா” என்ற பாடலை பாடியிருக்கிறார்.
தமிழுக்கு இளையகன்னிதான் அவருடைய முதல் பாடல் என அறியப்பட்டாலும், அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் ”ஆயிரம் நிலவே வா” என்ற பாடல் மூலம் அவருடைய குரல் தமிழகம் முழுவதும் வியாபித்தது.
அன்று ஆரம்பித்த அவருடைய இசைபயணம் ஏறக்குறைய 40 ஆயிரம் பாடல்கள்வரை அழைத்து சென்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்தது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் அவர் சங்கீதத்தை முறையாக பயின்றவர் அல்ல என்பதுதான். அவருடைய குரலில் வருகின்ற நெளிவுசுளிவுகள் சங்கீதம் பயின்றவர் என்ற எண்ணத்தையே வரவைக்கும். அதுமட்டுமா ஒரேநாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்த்த முடியாத சாதனையும் புகழ் மைந்தன் தன்வசம் கொண்டுள்ளார்.
இப்படி ஏரளமான பாடல்களை பாடிய அவரை மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தது. ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகள், கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகள், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருது என பல விருதுகளை பெற்ற மாபெரும் இசைகலைஞரானார்.
பல விருதுகளை பெற்றுகொண்ட இசையின் மன்னன் இன்று நம்மிடையே இல்லை என்பது சொல்லெனா துயரத்தை ஏற்படுத்துகிறது. அமர்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடலை கேட்கும் பொழுது அவரின்றிய இசை துறை தனிமையில் இருக்கிறதோ என்ற எண்ணத்தை தருகிறது.
இப்படியாக மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ, காட்டுக்குள்ள மனசுக்குள்ள, மலையோரம் வீசும் காற்றே, சுந்தரி கண்ணாள் ஒரு சேதி என இன்றும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் பாடல்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் சரித்திரத்தை பேசும் என்பதில் மாற்றமில்லை.