யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும் அவற்றில் இரண்டு தொலைபேசிகள் தொடர்பில் மட்டுமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவைகள் உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏனைய 5 தொலைபேசிகள் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே குறித்த தொலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு, தொலைபேசிகள் திருட்டு போனவர்கள் / தொலைத்தவர்கள் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதகாலங்களிற்கு உட்பட்ட காலப்பகுதிகளில் பெரும்பாலும் யாழ்.போதனா வைத்திசாலையில் 21ம் மற்றும் 24ம் நோயாளர்கள் விடுதிகளிலே குறித்த தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.
இவைகள் அதிகமாக வைத்தியசாலை பணியாளர்களுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தொலைக்கப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் உரியவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு பொறுப்பதிகாரியினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.