25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இலங்கையையும் தெரிவு செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அமெரிக்கா தனது நன்கொடை தடுப்பூசி அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் உதவியைக் கோரிய ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது.
அதற்கமைய இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகளுக்கு இவ்வாறு தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான அமெரிக்க தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்வது அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேநேரம், தாங்கள் இந்த அளவுகளைப் பகிர்ந்துகொள்வது, உதவிகளைப் பெறவோ அல்லது சலுகைகளைப் பெறவோ அல்ல என்றும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உலகை வழிநடத்துவதற்குமே என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இலங்கை தனது அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 6 இலட்சம் அளவு தடுப்பூசிகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் முறையாகக் கோரியிருந்தது.
இந்த நிலையிலேயே ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் குறிப்பிட்ட தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசிகளின் தொகைகள் தீர்மானிக்கப்பட்டு பகிரப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.