ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா சடலத்தை கொண்டுச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற, கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எஸ்.பெனடிக் (வயது 57) என்ற பொலிஸ் அதிகாரியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் சென்ற வாகனம், வட்டவளை- கரோலினா பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய 3 பொலிஸ் அதிகாரிகள், வாகன சாரதி மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உறவினர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் மற்றும் வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.