நாட்டில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய 3,000 பைன்ட் இரத்தத்தை இரத்த நிலையங்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் முன்வருவோமென இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இரத்த நிலையங்களுக்கு முதல் ஐந்து முகாம்கள் ஊடாக 10 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 500 பைன்ட் இரத்தத்தை தானம் செய்ய முடிந்தது.
அந்தவகையில் அடுத்த கட்டமாக 2,500 பைன்ட் இரத்தத்தை இரத்த நிலையத்துக்கு தானம் செய்வதே எங்களது நோக்கமாகும்.
மேலும் இரத்தினபுரி, கண்டி, பொலன்னறுவ, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்த மாதத்தில் மாத்திரம் மேலும் 7 சிறப்பு இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளோம்
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு, மாவட்ட மின்னியலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து, இரத்த தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண மாவட்ட ரீதியாக12 இரத்த தான முகாம்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது.
இதில் 5முகாம்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் ஏனைய முகாம்களை இந்த மாதம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அவசரமாக இரத்தம் தேவைப்படும் புத்தளம், அனுராதபுரம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே முதல் 5 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன.
குறித்த 5 முகாம்களின் ஊடாக மாவட்டங்களிலுள்ள இரத்த நிலையங்களுக்குத் தேவையான கிட்டத்தட்ட 500 பைன்ட் இரத்தத்தை தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.