இதுவரை நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, சமீபத்தில் 2020 யு.எஸ். ஓபின் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபின் பட்டங்களை வென்றிருந்தார். ஊடகவியலாளர் சந்திப்பினால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் பிரெஞ்ச் ஓபின் தொடரில் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரெஞ்ச் ஓபின் போட்டித்தொடரின் நிர்வாகம், ஒசாகாவின் நடவடிக்கைக்கு 15,000 டாலர் அபராதம் விதித்தது. முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.
மேலும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் பிரெஞ்ச் ஓபின் உள்ளிட்ட நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் நிர்வாகங்களும் எச்சரித்தன. இதையடுத்து, தன்னால் கவனச்சிதறல் ஏற்பட வேண்டாம் என்று கூறி இந்த வருட பிரெஞ்ச் ஓபின் தொடரிலிருந்து விலகினார் ஒசாகா.
“மன அழுத்தம் ஏற்படுவதால் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். தொடரிலிருந்து நான் விலகுவதால் மற்ற வீரர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். யு.எஸ். ஓபின் 2018 இலிருந்து நான் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளேன். அதைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பொதுவெளியில் என்னால் இயல்பாகப் பேச முடியாது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு முன்பு எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் பிரெஞ்ச் ஓபின் போட்டியில் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க நினைத்தேன். சரியான நேரத்தில் போட்டி நிர்வாகங்களுடன் இதுபற்றி விவாதிப்பேன்” என்று தன் விலகலுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஜூன் 14 முதல் ஆரம்பமாகவுள்ள பெர்லின் போட்டியிலிருந்தும் ஒசாகா விலகியுள்ளார். பிரெஞ்ச் ஓபின் போட்டியிலிருந்து விலகிய ஒசாகா, நேராக அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். தற்போது இரு போட்டிகளிலிருந்தும் அவர் விலகியுள்ளதால் ஜூன் 28 முதல் ஆரம்பமாகவுள்ள விம்பிள்டன் போட்டியில் ஒசாகா கலந்துகொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.