கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ், சிவப்பு பட்டியலில் 16 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இலங்கையும் உள்ளது.
இவ்வாறு சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளின் பார்வையாளர்களுக்கு பிரான்ஸிற்குள் வருகைதருவதனை அனுமதிக்க வேண்டுமாயின், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்று தூதரகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில அனுமதிக்கப்பட்ட நபர்களில் சுற்றுலாப் பயணிகள் என வகைப்படுத்தப்படாத மற்றவர்களில் பிரெஞ்சு நாட்டவர்களும் அடங்குவர்.
மேலும் பிரான்ஸ் நாட்டுக்குள் பயணிக்க வேண்டியவர்கள், முதலில் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர் அல்லது அன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸின் சிவப்பு பட்டியலில் அர்ஜென்டினா, பஹ்ரைன், பங்களாதேஷ், பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, சுரினாம், துருக்கி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.