கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இவ்வாறு திட்டமிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற கொரோனாக்களுக்கு வித்திடலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ வல்லுநர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘பெருந்திரளான மக்களுக்கு, பாரபட்சமின்றி, அரைகுறையாக தடுப்பூசி போடுவது, தடுப்பு மருந்துகளை விஞ்சும் வகையில் உருமாற்றக் கொரோனாவுக்கு வித்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடுவதைவிட பலவீனமானவர்களுக்கும், பாதிக்கப்படக்கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதையே இலக்காக கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை என்றும், அப்படி தடுப்பூசி போடுவதால் பலன் உண்டு என சான்றுகளை திரட்டிய பிறகு செயல்படுத்தலாம் எனவும் வல்லுநர்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.