மேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்ஸ் குறைக்க உள்ளது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள 5,100பேர் கொண்ட பணிக்குழு ஒரு பரந்த சர்வதேச பணியில் இணைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
துருப்புக்களை குறைப்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் நடைபெறும். மேலும் ஜூன் இறுதிக்குள் விபரங்கள் இறுதி செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
பிரான்ஸ் படைகள் மாலி, சாட், மவுரித்தேனியா, நைஜர் மற்றும் புர்கினா பாசோ ஆகிய இடங்களில் போராளிகளை எதிர்த்துப் போராடி வருகின்றன.
கடந்த வாரம், இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் மாலியில் நடவடிக்கைகளை நிறுத்தியது.
அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் தொடர்புடைய போராளிகள் இப்பகுதியில் தங்கள் பிடியை வலுப்படுத்தியுள்ளனர். இது இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு முன்னணி வரிசையாக மாறியுள்ளது.
மாலி மற்றும் நைஜீரியா இராணுவங்களுடன் சேர்ந்து சஹேலில் போராளிகளுடன் போராடும் டாகுபா பணிக்குழுவின் ஒரு பகுதியாக, இப்பகுதியில் எஞ்சியவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.