உலகநாடுகள் உற்றுநோக்கி கொண்டிருக்கும் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் கன்சர்வேடிவ் நீதித்துறைத் தலைவர் இப்ராஹிம் ரைசி, முன்னிலை வகிக்கிறார் என்று முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
எண்ணப்பட்ட 28.6 மில்லியன் வாக்குகளில் ரெய்சி 17.8 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதியாக இருந்த ஹார்ட்லைனர் மொஹ்சென் ரெஸாய் 3.3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப், மத்திய மிதவாதியான முன்னாள் மத்திய வங்கித் தலைவர் அப்தோல்நேசர் ஹெம்மதி பெற்றார்.
அத்துடன், பழமைவாத சட்டமன்ற உறுப்பினர் அமீர் ஹொசைன் காசிதாதே ஹஷேமி ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
முன்னணியில் திகழும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இப்ராஹிம் ரைசி அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆதரவாளராக நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகிறார்.
தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாகப்; பொறுப்பேற்றால், சர்வதேச அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர்.
ஈரான் தேர்தலில் இம்முறை பெண்கள் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 பெண்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த நிலையில், அவர்களது வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன.
அணு ஆயுதக் கொள்கை காரணமாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஈரான் கடுமையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக இத்தேர்தலில் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குப் பதிவு நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 சதவீதக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.