கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தொற்றுநோயியல் பிரிவு மீது சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இறப்புக்கள் தொடர்பான குறைபாடுகள் காரணமாக அவற்றை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு அதிகாரியின் தரப்பிலும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
இந்த பிரச்சினையை அடுத்து முன்னாள் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர அந்த அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இருப்பினும், இடமாற்றம் ஒரு தேர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தவறான தரவுகளின் அடிப்படையில் ஜூன் 14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டது என ஜனாதிபதி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.