அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப, உயிர்ப்புள்ள தமிழ் சமூகத்தில் இணைந்திட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்களை அரசு வரவேற்கும்.
அதேநேரம் தமிழக மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
இந்த நோக்கத்துக்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும், இரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.