மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 158 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
சென். லூஸியா மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 96 ஓட்டங்களையும் டீன் எல்கர் 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமர் ரோச் மற்றும் கெய்ல் மேயர்ஸ் 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிளக்வுட் 49 ஓட்டங்களையும் ஷாய் ஹோப் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், முல்டர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நோட்ஜே 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 149 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 324 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெண்டர் டஸன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களையும் ரபாடா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரோச் 4 விக்கெட்டுகளையும் கெய்ல் மேயர்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், ஜேஸன் ஹோல்டர் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
324 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 165 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 158 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கீய்ரன் பவல் 51 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கேசவ் மஹாராஜ் ஹெட்ரிக் விக்கெட் அடங்களாக 5 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரபாடா தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.