சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று (30) ஆரம்பமாகிறது.
இந்த முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலாவது போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இரவு பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்குபற்றும் கடைசி இருபதுக்கு-20 தொடர் இதுவாகும்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 14 இருபதுக்கு-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியானது 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு-20 தொடரை ஒன்றை கைப்பற்றவில்லை.
அதேபோன்று, இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக ஒரு இருபதுக்கு-20 போட்டியில் வெற்றியீட்டியதும் 2014 ஆம் ஆண்டிலேயாகும்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
இவ்வாறான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















