கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வர் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனா வைரஸ் தொற்று இதுவரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.2 சதவீதமானோரை பாதித்துள்ளது. இது இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில், 97 சதவீத மக்களை பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாம் பாதுகாப்பு அம்சங்களை கை விட்டு விட முடியாது. கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம். கொரோனா தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள், வதந்திகள், சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களை காரணமாக பல பயனாளிகள் குறிப்பாக கிராமப்புறங்களிலும், பழங்குடியினர் பகுதிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியுள்ளனர்.
தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை உடைத்து, கொரோனா கால பொருத்தமான நடத்தையின் பங்கு பற்றி சமூகத்துக்கு நினைவுப்படுத்துவதும் முக்கியமானது. இது பரவல சங்கிலியை உடைப்பதில் முக்கியமானது’ எனத் தெரிவித்தார்.