பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பயங்கரவாதம் எந்த வகையில் வெளிப்பாட்டாலும், அதை ஒடுக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம். எல்லை தாண்டிய பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன்நிறுத்தியாக வேண்டும்.
ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள் கடத்துவது, சமூக வலைதளம், டார்க் வெப் போன்றவற்றை தங்கள் சதித்திட்டங்களுக்காக தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயங்கரவாத குழுக்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இதை கண்காணித்து முறியடிக்க வேண்டும்.
ஐ.நாவால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றம் குழுக்கள் மீது பொருளாதார தடைகள், தீர்மானங்கள் முழுதுமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை தடுக்க நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, மற்றும் ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம், உருவாக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.